விழுப்புரம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி வாலிபர் கைது
விழுப்புரம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் ஒரு ஏ.டி.எம். மையத்திற்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், பணத்தை கொள்ளையடிப்பதற்காக அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் அருகில் உள்ள விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். சம்பவம் நடந்த பகுதி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் அந்த நபரை தாலுகா போலீசாரிடம் விக்கிரவாண்டி போலீசார் ஒப்படைத்தனர்.
வாலிபர் கைது
இதையடுத்து பிடிபட்டவரிடம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திரா மாநிலம் கார்நூல் மாவட்டம் பெண்டிகால் பகுதியை சேர்ந்த சண்டிகாசின் (வயது 36) என்பதும், இவர் ஏ.டி.எம்.
மையத்தில் பணம் கொள்ளையடிப்பதற்காக அந்த மையத்திற்குள் முகத்தை மூடியபடி புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை துணியை கொண்டு மறைத்து விட்டு அதன் பிறகு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து சண்டிகாசினை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.