லாரி டிரைவர் மர்ம சாவு

வாணியம்பாடி அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-21 16:23 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

லாரி டிரைவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜலபதி (வயது 45), லாரி டிரைவர். 

இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகள் மற்றும் 10 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

ஜலபதி வளையாம்பட்டு அருகே உள்ள கொல்லகொட்டாய் பகுதியில் மாமியார் வீட்டில் மனைவிக்கு கொடுத்த நிலத்தில் தங்கி குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தார். 

ஜலபதிக்கு 4 அண்ணன்கள், 2 அக்காள்கள் உள்ளனர். தந்தை வழியில் 6 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், தனக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து தருமாறு தன் அண்ணன்களுடன் கடந்த 2 மாதங்களாக கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

கிணற்றில் பிணம்

கடந்தவாரம் தன் அண்ணன்களுடன் சொத்து கேட்டு சண்டையிட்டு மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் ஜலபதி காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. 

உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இன்று அவருடைய மனைவியின் அக்கா கீதாவுக்கு சொந்தமான கிணற்றில் ஜலபதி பிணமாக மிதப்பதாக வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா? போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்து கிடைக்காத விரக்தியில் ஜலபதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்