குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
வாய்மேடு அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
வேதாரண்யம் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னடார், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி, தாணிக்கோட்டகம், தகட்டூர், கடினல்வயல், பஞ்சநதிக்குளம் கிழக்கு, பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய ஊராட்சிகளுக்கு கடந்த 10 நாட்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமையில் 50-க்கும் பொதுமக்கள் தகட்டூர் கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் தென்னடார் ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில், பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சி மன்ற தலைவர் சத்தியகலா, தாணிக்கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், தகட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரத்தங்கம், கடிநெல்வயல்ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதகுறித்து தகவலறிந்து வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கர் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 27-ந்தேதிக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
27-ந்தேதிக்குள் குடிநீர் வழங்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தெரிவித்தார்