தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்
கோவில்பட்டியில் நடந்து வரும் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு அணி வெற்றி
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி வளாகத்தில் 11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் 27 மாநில அணிகள் பங்கேற்றுள்ளது.
6-வது நாளான நேற்று காலையில் நடந்த முதலாவது போட்டியில் தமிழ்நாடு அணியும், அந்தமான் நிக்கோபார் அணியும் மோதுவதாக இருந்தது. ஆனால், அந்தமான் நிக்கோபார் அணி வராததால் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2-வது போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இமாசல பிரதேச அணியை வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று கால்இறுதி ஆட்டங்கள்
ெதாடர்ந்து நடந்த போட்டியில் டெல்லி அணி 14-1 என்ற கோல் கணக்கில் குஜராத் அணியை பந்தாடியது. மணிப்பூர்- புதுச்சேரி அணிகள் மோதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 5 கோல் போட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஜார்கண்ட் அணி 11-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை சம்ஹாரம் செய்தது. பீகார் அணி 6-1 என்ற கோல் கணக்கில் அசாம் அணியை வென்றது.
லீக் சுற்று நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) கால்இறுதி போட்டிகள் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சண்டிகர்-பஞ்சாப் அணியும், 10 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு-அரியானா அணியும் மோதுகின்றது.
மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் உத்தரபிரதேசம்-டெல்லி அணியும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஒடிசா-பீகார் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றது.