திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து கெட்டுப்போன 42 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
42 கிலோ இறைச்சி பறிமுதல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புக்குழு அதிகாரிகள் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், ரெஸ்ட்டாரண்டுகள், அசைவ உணவகங்களில் ஆய்வு செய்தனர். திருப்பூரில் காங்கேயம் ரோடு, ரெயில் நிலையம், பஸ் நிலையம் சுற்றுப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், ரெஸ்ட்டாரண்டுகள், இறைச்சி சார்ந்த உணவு கடைகள் என 17 உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படாத 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 2 கடைகளில் தரம் குறைந்த மற்றும் கெட்டுப்போன 42 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இரண்டு கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மூடி வைக்காமல் திறந்த நிலையில் இருந்த உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இஞ்சி, பூண்டு மசாலா பேஸ்ட் சுமார் 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
அபராதம்
உணவு பாதுகாப்பு உரிமம் உள்ள கடைகளில் இறைச்சி வாங்க வேண்டும். உணவு தயாரிப்பதற்கு இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். பராமரிப்பு பதிவேடுகளை சமர்ப்பிக்க வேண்டும். உணவுகளுக்கு செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதை தவிர்க்க வேண்டும். உணவகங்களில் ஒருவராவது FosTaC பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் உணவுப்பொருட்களை கட்டிக்கொடுக்க கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின்போது 10 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு கடைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 9 கடைகளுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உரிமம் சான்று மற்றும் பதிவுச்சான்று காலாவதியான, இல்லாத கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைவரும் சான்று பெற அறிவுறுத்தப்பட்டது. கலப்படம் மற்றும் உணவு தரம் தொடர்பான புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.