மூதாட்டியை ஏமாற்றி தங்கநகைகள் அபேஸ்
மூதாட்டியை ஏமாற்றி தங்கநகையை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வள்ளியம்மை(வயது 80). இவர்களது மகள் கொளஞ்சி, பேரன் மணிராஜா ஆகியோர் நேற்று காலை வயலுக்கு சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வள்ளியம்மை வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தார். அப்போது டிப்டாப் உடையணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி வள்ளியம்மையிடம் பேச்சு கொடுத்து நகையை கொடுங்கள் பணம் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். வள்ளியம்மையும், அவர்களை உறவினர் என்று நினைத்து தான் அணிந்திருந்த 2 பவுன் வளையல் மற்றும் அரை பவுன் தோடு ஆகியவற்றை கழற்றி கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள், மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை கழற்றிக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றி சென்றுவிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த குன்னம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து மணிராஜா கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.