சேலம் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது
சேலம் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது.
சேலம்,
3 மாணவர் பலி
நெல்லையில் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற துயர சம்பவம் வேறு எங்கும் நடைபெறாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பு செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டம் முழுவதும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்த விவரத்தை கணக்கெடுக்கும் பணிகள் நடந்தன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் பழுதடைந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இடிக்கும் பணி
சேலம் மாவட்டத்தில் 32 பள்ளிகளில் 41 வகுப்பறைகள் பழுதடைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்த பழைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
மேலும் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மாபேட்டையில் நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு கட்டிடம் பழுதடைந்து இருந்ததால் அதை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் பழுதடைந்த மற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.