தி.மு.க.வினர் எழுச்சியோடு வரவேற்பு அளிக்கவேண்டும்

தஞ்சைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் எழுச்சியோடு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Update: 2021-12-20 20:54 GMT
தஞ்சாவூர்;
தஞ்சைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் எழுச்சியோடு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
செயற்குழு கூட்டம்
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தஞ்சையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர்இறைவன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது
தஞ்சையில் வருகிற 30-ந்தேதி நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 29-ந்தேதி இரவு தஞ்சை வருகிறார். அவருக்கு தி.மு.க.வினர், சார்பு அணி நிர்வாகிகள் வழிநெடுக எழுச்சியோடு வரவேற்பு அளிக்க வேண்டும்.
கொடிகள் கட்ட வேண்டும்
இதற்காக வழிநெடுகிலும் தி.மு.க. கொடிகள் கட்ட வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் பிளக்ஸ் வைக்க கூடாது. சேலம், கோவை மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சியை மிஞ்சும் வகையில் தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சி இடம்பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. பரசுராமன், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி, மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பிரிவு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் அண்ணா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்