குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: தீயில் கருகிய 6 வயது மகளும் பரிதாப சாவு
இளம்பிள்ளை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடன் தீயில் கருகிய 6 வயது மகளும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இளம்பிள்ளை,
மகளுடன் தீக்குளித்த பெண்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மகுடஞ்சாவடியை அடுத்த காளிகவுண்டம்பாளையம் அரண்மனைக்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி தங்கமணி (வயது 35). இவர்களின் மகள் அகல்யா (6).
சக்திவேலுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குடும்ப தகராறால் மனம் உடைந்த தங்கமணி நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த போது தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து தனது குழந்தை அகல்யாவை தன்னுடன் சேர்த்து பிடித்துக்கொண்டு, மண்எண்ணெயை ஊற்றி தனது உடலில் தீ வைத்துக்கொண்டார்.
இதில் அவர்கள் இருவரின் உடலில் பற்றி எரிய தொடங்கியது. அப்போது அவர்கள் வசித்து வந்த வீட்டின் கூரையிலும் தீப்பற்றி எரிந்தது. இதனிடையே அவர்களின் வீட்டில் தீப்பற்றி எரிவதையும், வீட்டுக்குள் அலறல் சத்தம் கேட்பதையும் அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.
உடல் மீ்ட்பு
மேலும் சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கும், மகுடஞ்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை விரைந்து அணைத்தனர். உடனே போலீசார் தீயில் எரிந்துசேதம் அடைந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு தங்கமணி தீயில் கருகி இறந்து கிடந்தார்.
அதே நேரத்தில் சிறுமி அகல்யா, உயிருக்கு ஆபத்தான நிலையில் வலியில் அலறி துடித்துக்கொண்டு இருந்தாள். உடனே அந்த சிறுமியை மீட்ட போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் தங்கமணியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு வரப்பட்டது.
சிறுமியும் சாவு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி அகல்யா நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குடும்ப தகராறில் குழந்தையுடன் பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் இளம்பிள்ளை அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.