தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாணவன் பலி
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாணவன் இறந்தார்.
நெல்லை:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குருநாத மூர்த்தி. இவருடைய மகன் வெங்கடேசன் என்ற பரத் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் குருநாத மூர்த்தியின் உறவினர் ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக ஒரு வேனில் உறவினர்கள் அனைவரும் நெல்லை அருகே உள்ள அருகன்குளம் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தனர். அங்கு திதி கொடுத்து விட்டு அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். பின்னர் வெங்கடேசன் தவிர மற்ற அனைவரும் குளித்துவிட்டு கரைக்கு வந்து விட்டனர். வெங்கடேசன் மட்டும் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீருக்குள் மூழ்கி தத்தளித்தார். உடனே உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீருக்குள் மூழ்கி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் ஆற்றுக்குள் இறங்கி தண்ணீர் மூழ்கி இறந்த வெங்கடேசனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.