முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள் வீடு உள்பட 14 இடங்களில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள் வீடு உள்பட 14 இடங்களில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

Update: 2021-12-20 17:00 GMT
நாமக்கல்:
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள் வீடு உள்பட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 
முன்னாள் அமைச்சர் தங்கமணி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 14-ந் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக 15-ந் தேதி அவருடைய வீடு உள்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ 130 கிராம் தங்கம், சுமார் 40 கிலோ வெள்ளி, செல்போன்கள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிடவும் போலீசார் முடிவு செய்திருந்தனர்.
14 இடங்களில் சோதனை
இந்த நிலையில் நேற்று மீண்டும் நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தங்கமணிக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 
அதன்படி நாமக்கல் அழகுநகர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் மோகன் வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவரது குடும்பத்தினர் மோகனூர் சாலையில் மருந்து கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதில் தங்கமணியின் மகன் தரணிதரன் பங்குதாரராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவே சோதனைக்கு காரணம் என கூறப்படுகிறது. 
தங்கும் விடுதி, நூற்பாலை
மேலும், மோகனூர் சாலை பி.வி.ஆர். தெருவில் உள்ள ஹேச்சரீஸ் நிறுவனம், ராக்கி நகரில் தீபன் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதேபோல் நாமக்கல்லை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரர் பெரியசாமிக்கு சொந்தமான கொல்லிமலை வால்குழிப்பட்டியில் உள்ள தங்கும் விடுதி, மங்களம் பகுதியில் உள்ள பண்ணை வீடு, அவரது மகன் அசோக்குமாருக்கு சொந்தமான வீடு, எருமப்பட்டியில் உள்ள நூற்பாலை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 
கோழிப்பண்ணை
அதேபோல் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் சிமெண்ட் பைப் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் சண்முகம் என்பவரது வீடு மற்றும் கோலாரம் ஊராட்சிக்குட்பட்ட கருங்கல்பட்டியில் உள்ள அவரது கோழிப்பண்ணை ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இதையொட்டி பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையத்தில் நேற்று காலை தங்கமணியின் மருமகனான தினேஷ் குமாரின் ஆடிட்டர் செந்தில்குமார் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். மதியம் வரை நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 
சேலம் நண்பர் வீடு
சேலம் திருவாக்கவுண்டனூரில் அரசு ஒப்பந்ததாரரும், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய நண்பருமான குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் வீடு உள்ளது. 
இந்த வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணி அளவில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். பின்னர் அவர்கள் மாலை 5.30 மணி வரை சோதனை நடத்தினார்கள். 
ஈரோட்டில் 3 இடங்களில் சோதனை
இதேபோல முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஈரோட்டில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என 3 இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஈரோடு வில்லரசம்பட்டியில் ஒண்டிக்காரன்பாளையம் ஐஸ்வர்யா பார்க் பகுதியில் உள்ள எஸ்.செந்தில்நாதன் என்பவருடைய வீடு, வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு பகுதியில் உள்ள டி.கோபாலகிருஷ்ணன் என்பவருடைய வீடு, திண்டல் சக்திநகர் செல்லம்மாள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டி.பாலசுந்தரன் என்பவருடைய வீடு என 3 இடங்களிலும் நேற்று மாலை வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு சக்தி நகரில் உள்ள பாலசுந்தரன் வீட்டில் ஆய்வில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்து அட்டை பெட்டிகளில் ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றினர். இந்த சோதனை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்ததாக தெரிகிறது. சோதனை நடந்த வீடுகளின் முன்பு வீரப்பன்சத்திரம் மற்றும் சூரம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி
நேற்று ஒரேநாளில் நாமக்கல்லில் 10 இடங்கள், சேலத்தில் ஒரு இடம், ஈரோட்டில் 3 இடங்கள் என மொத்தம் 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை இரவும் நீடித்தது.
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
---------------------------

மேலும் செய்திகள்