விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா: பெண்கள், நீதித்துறையில் பணியாற்ற முனைப்பு காட்டுவது அவசியம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பேச்சு

பெண்கள், நீதித்துறையில் பணியாற்ற முனைப்பு காட்டுவது அவசியம் என்று விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பேசினார்.

Update: 2021-12-20 16:13 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கயல்விழி வரவேற்று  தொடக்க உரையாற்றினார்.

விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 45 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

தெளிந்த சிந்தனை

ஒரு சட்டக்கல்லூரி மாணவர் படித்து முடித்து பட்டம் பெற்ற பிறகு தான் அவரின் உண்மையான பயணம் தொடங்குகிறது. முதலில் உங்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை வேண்டும். இரண்டாவதாக தெளிந்த சிந்தனை, அதன் வாயிலாக வருகிற சொல் அவசியம். 

நீங்கள் வக்கீலாக பணியாற்றும்போது நீதிமன்றத்தை பற்றியும், வழக்கை எப்படி எடுத்துச்செல்ல வேண்டும் என்பது பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் சட்டத்தை எப்படி கையாள வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மக்களோடு பழகி அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் கெட்டிக்காரத்தனம் வேண்டும். வக்கீல்கள் என்றால் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும், அந்த சிந்திக்கிற திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

வக்கீல் தொழில் என்பது மிகச்சிறந்த தொழில், ஆனால் அதில் முன்னேறுவதற்கு கடின உழைப்பு வேண்டும். முதன்முதலில் வக்கீலாக பணியாற்றும்போது சிரமங்கள் அதிகமாக இருக்கும். 

எனவே என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சிறந்த வக்கீலாக வர வேண்டுமா அல்லது நீதித்துறையில் சேர்ந்து சிறந்த நிலைக்கு வர வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

தனி இடஒதுக்கீடு

இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிபதிகள் உள்ளனர். பொதுவாக பெண்களுக்காக தனியாக இட ஒதுக்கீடு இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மற்ற மாநிலங்களிலும் இது இருக்கிறது.

 ஆனால் இங்கு மட்டும் 30 சதவீதம் இருந்தாலும் அதற்கும் மேல் சேர்ந்து மற்றவர்களுடன் போட்டியிட முடியும். ஆகவே ஒரு கனவோடு உங்கள் தொழிலை மேற்கொள்ளுங்கள். தொழிலில் தர்மம் இருக்க வேண்டும், ஆனால் தர்மத்தை தொழிலாக செய்யக்கூடாது.

இன்றைய காலகட்டத்தில் இளம் பெண் வக்கீல்களுக்கு சில துறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் நீதிபதியாக வேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் மொத்தமுள்ள 14 அரசு சட்டக்கல்லூரிகளில் 9 சட்டக்கல்லூரிகளில் பெண்கள் தான் முதல்வராக இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது நாளை நீதித்துறையே பெண்கள் கையில்தான் இருக்கும்.

சமுதாய மாற்றம்

சமுதாய மாற்றத்தை பொறுத்து நீதித்துறையும் மாறும், வழக்கின் தன்மையும் மாறும். இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து, குழந்தைகள் பராமரிப்பு இதுபோன்ற வழக்குகள் வரும்காலங்களில் பெருகும் என்பதால் அதுபோன்ற வழக்குகளை கையாள பெண்கள், நீதித்துறையில் பணியாற்ற முனைப்பு காட்டுவது அவசியம். 

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்தோஷ்குமார், அரசு செயலாளர் (சட்ட விவகாரங்கள்) கார்த்திகேயன், சட்டக்கல்வி இயக்குனர் சொக்கலிங்கம், அரசு சட்டக்கல்லூரி முதல்வர்கள் சென்னை கவுரிரமேஷ், சேலம் துர்காலட்சுமி, தர்மபுரி சிவதாஸ், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் மற்றும் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் ராமஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்