தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெய் பாட்டிலை மறைத்து எடுத்து வந்த ஒரு பெண் அதை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் காரிமங்கலம் அருகே உள்ள பெத்தாபுரம் கிராமத்தை சேர்ந்த சிவகாமி (வயது 45) என்பதும், இவருடைய கணவர் முனுசாமி அரசு பள்ளி ஆசிரியர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற சிவகாமி கூறுகையில், எங்களுக்கும், உறவினர்கள் சிலருக்கும் வழித்தட பாதை பிரச்சினை உள்ளது. இதனால் நாங்கள் விவசாயம் செய்வதை சிலர் தடுத்தனர். இதுதொடர்பாக காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களிடம் விசாரணை நடத்தினார்.
சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டல்
அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அவர் கேட்டபடி ரூ.20 ஆயிரம் கொடுத்தேன். அதன்பின் மீண்டும் 18 அடி வழித்தட பாதையை விட வேண்டுமென்று எங்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்தார். நாங்கள் அளித்த புகார் தொடர்பாக எங்களுக்கு சி.எஸ்.ஆர். நகலும் தரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த கோரி தீக்குளிக்க முயன்றேன் என்று கூறினார்.
பரபரப்பு
இதேபோல் தர்மபுரி சவுளுபட்டி பகுதியை சேர்ந்த சாரா என்ற பெண் மண்எண்ணெய் பாட்டிலை பையில் மறைத்து வைத்து கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்து வந்தார். சோதனையின்போது அந்த பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். நில பிரச்சினை தொடர்பாக மிரட்டல் வந்ததால் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட அவர் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு அரூர் பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற பெண் பையில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். விதவையான அவருக்கு அங்கன்வாடியில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளிக்க வந்தது தெரியவந்தது. 3 பெண்கள் தீக்குளிக்க வந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.