ஆர்.டி.ஓ. கையொப்பத்தை பயன்படுத்தி மோசடி செய்ததாக புகார்
150 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஓ. கையொப்பத்தை பயன்படுத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
தேனி:
அரசு நிலம் அபகரிப்பு
பெரியகுளம் அருகே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றனர். இதில் தொடர்புடைய 2 தாசில்தார்கள், 2 துணை தாசில்தார்கள், 2 நில அளவையர்கள், தலைமை நில அளவை உதவி ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 7 பேர் இதுவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடவீரநாயக்கன்பட்டியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த நிலம் மீட்கப்பட்டு மீண்டும் அரசு நிலமாக மாற்றப்பட்டது.
இதேபோல், தாமரைக்குளம் பகுதியில் இதே அதிகாரிகள் துணையுடன் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை 42 பேர் அபகரித்து பட்டா பெற்றது தெரியவந்தது. அந்த பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அந்த வகையில் பெரியகுளம் தாலுகா பகுதியில் மொத்தம் 150.65 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ‘அ' பதிவேட்டை இணைய வழியில் திருத்தம் செய்து நில ஆவணங்கள் மாற்றப்பட்டதும், அதில் ஆர்.டி.ஓ.வின் கையொப்பம் டிஜிட்டல் முறையில் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதனால் இந்த நில அபகரிப்பு நடந்த காலகட்டத்தில் பணியாற்றிய ஆர்.டி.ஓ. அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அந்த புகார் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் மீதும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தேனி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகள் புகார்
இந்நிலையில் நில அபகரிப்பு நடந்த காலகட்டத்தில் பெரியகுளம் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி ஆகிய இருவரும் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார்கள் கொடுத்துள்ளனர். அந்த புகாரில், அவர்கள் பெரியகுளம் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றியபோது அவர்களின் டிஜிட்டல் கையொப்பத்தை யாரோ தவறாக பயன்படுத்தியும், இணையதளத்தில் ஆர்.டி.ஓ.வுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தியும் ஆவணங்களில் திருத்தம் செய்து மோசடி செய்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த புகார்கள் குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் மேலும் சில அலுவலர்கள் சிக்க வாய்ப்புள்ளது.