அரசு வேலை வாங்கித்தருவதாக போலி பணியாணை கொடுத்து ரூ.11 கோடி மோசடி. குறைதீர்வு கூட்டத்தில் இளைஞர்கள் புகார்
அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி 140 பேருக்குபோலபணியாணை வழங்கி ரூ.11 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு குறைதீர்வு கூட்டத்தில் இளைஞர்கள் புகார் மனுகொடுத்துள்ளனர்.
வேலூர்
அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி 140 பேருக்குபோலபணியாணை வழங்கி ரூ.11 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு குறைதீர்வு கூட்டத்தில் இளைஞர்கள் புகார் மனுகொடுத்துள்ளனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டவருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை, கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
காட்பாடி தாலுகா சேர்க்காடு இருளர் காலனியை சேர்ந்த இருளர் இனமக்கள் அளித்துள்ள மனுவில் நாங்கள் 25 குடும்பத்தினர் இருளர் காலனியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இந்த இடம் போதுமானதாக இல்லை. எங்களது மூதாதையர்களுக்கு வேறு இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. அந்த இடத்துக்கு குடிஅமர நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் சிலர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டுத் தரவேண்டும். என்று கூறியிருந்தனர்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அளித்த மனு குறித்து அவர்கள் கூறியதாவது:-
ரூ.11 கோடி மோசடி
எங்களிடம் நெமிலியை சேர்ந்த நபர் மற்றும் சிலர் காவலர் பணி, பிகிலர் பணி, தீயணைப்பு வீரர் பணி உள்ளிட்ட அரசு பணி வாங்கித்தருவதாக கூறினர். அதற்காக பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். அதன்பேரில் ஒவ்வொருவரும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை பணம் அளித்தோம். இதையடுத்து எங்களுக்கு பணி ஆணை வழங்கினர். ஆனால் பணியில் சேரும் முன்பு பல்வேறு காரணங்களை கூறி பணியில் சேரவிடாமல் தடுத்தனர்.
அந்த பணி ஆணை போலியானது என பின்னர் தான் தெரியவந்தது. இதுவரை சுமார் 140 பேரிடம் ரூ.11 கோடி வரை ஏமாற்றி உள்ளனர். அவர்களிடம் இருந்து எங்களது பணத்தை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.