அந்தியூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து

அந்தியூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-12-20 15:45 GMT
அந்தியூர் அருகே உள்ள குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). மினி பஸ் டிரைவர். இவருடைய மனைவி வாகினி (20). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று சக்திவேல் வேலைக்கு சென்றுவிட்டார். வாகினி அருகில் உள்ள தன்னுடைய தாத்தா வீட்டுக்கு சென்றுவிட்டார். 
அப்போது வீட்டின் உள்ளே இருந்து கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. 
இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையே தாத்தா வீட்டுக்கு சென்ற வாகினிக்கு தகவல் கிடைத்ததும், அவர் வீட்டுக்கு விரைந்தோடி வந்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. 
உடனே இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
எனினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து கட்டில், பீரோ, உணவுப்பொருட்கள், துணிகள், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசம் ஆனது. 
இதுபற்றி தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்,’  என்றனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும் செய்திகள்