கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 258 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 258 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்

Update: 2021-12-20 15:31 GMT
கள்ளக்குறிச்சி

கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் விளம்பார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தச்சூர் காட்டுக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடங்களை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

258 கட்டிடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்துப் பள்ளிகளிலும் நீண்ட நாள் பயன்பாட்டில் இல்லாத உறுதித் தன்மை அற்ற உடனடியாக இடித்து அகற்றப்பட வேண்டிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவர் பற்றிய விவரங்கள் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

இதில் ஒன்றிய அளவில் 102 தொடக்கப் பள்ளிகளில் உள்ள 102 கட்டிடங்கள் மற்றும் 45 ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 69 கட்டிடங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட அளவில் 7 உயர்நிலைப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள், 26 மேல்நிலைப் பள்ளிகளில் 67 கட்டிடங்களையும் அகற்ற விழுப்புரம் பொதுப்பணித்துறை(கட்டிடம்) செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தாமாக முன்வந்து...

மேலும் அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் சி.ஆர்.சி. நோடல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோரை கொண்ட குழு உருவாக்கப்பட்டு பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை விவரங்களை உடனடியாக தயார் செய்து வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் தனியார் பள்ளி தாளாளர்கள் தாமாக முன்வந்து பயன்பாட்டில் இல்லாத பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். 

ஆசிரியர்களுக்கு அறிவுரை

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இறை வணக்கக் கூட்டத்தில் பழுதடைந்த கட்டிடத்தின் அருகே மாணவர்கள் செல்லவேண்டாம் என தினமும் அறிவுறுத்த வேண்டும் எனவும், பழுதடைந்த கட்டிடங்களுக்கு அருகே மாணவர்கள் செல்லாத வண்ணம் உரிய தடுப்புகள் ஏற்படுத்திடவும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மிகவும் கவனமுடன் பணியாற்ற உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 
இதன் தொடர்ச்சியாக விளம்பார் மற்றும் தச்சூர் காட்டுக்கொட்டாய் கிராமங்களில் பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்