கூடலூர் கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரம்

கூடலூர் கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரம்

Update: 2021-12-20 14:57 GMT
கூடலூர்

ஒமைக்ரான், பறவைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதால் கேரளாவில் இருந்து கூடலூர் வரும் வாகனங்கள் மாநில எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப் படுகின்றனர்.

ஒமைக்ரான், பறவைக் காய்ச்சல் பரவல்

கேரளாவில் கொரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதேபோல் கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோழிகள் உள்ளிட்ட பறவை இனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்ட வயல் உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் கர்நாடக எல்லையான கக்க நல்லாவிலும் சுகாதார மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

கண்காணிப்பு பணி தீவிரம்

இந்த நிலையில் கேரளா- கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளாமல் வருவதாக புகார் எழுந்தது. இதன்காரணமாக கூடலூர் பகுதியில் உள்ள எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

இதன் காரணமாக வருவாய், சுகாதார துறையினர் அடிக்கடி ஆய்வு நடத்தி வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளை சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் வயநாடு மாவட்டத்தில் இருந்து இறைச்சி கோழிகள் கொண்டு வரப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் அதிகளவு கோழி வளர்க்கும் உரிமையாளர்களிடம் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும்படி சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்