விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன பாதுகாவலர் குடும்பத்துக்கு ரூ.6¾ லட்சம் இழப்பீடு
விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன பாதுகாவலர் குடும்பத்துக்கு ரூ.6¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் ஏழுமலை (வயது 61). கடந்த 30.7.2019 அன்று இவர் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார். இதையடுத்து ரூ.15 லட்சம் இழப்பீடு கோரி அவருடைய மனைவி புஷ்பா, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, மனுதாரருக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்தை விபத்து நடந்த தேதியில் இருந்து ஆண்டுக்கு 7½ சதவீத வட்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.