ஓடையில் புதைந்திருந்த மூதாட்டி உடல் மீட்பு
ஓடையில் புதைந்திருந்த மூதாட்டி உடல் மீட்கப்பட்டது.
தா.பழூர்:
ஓடையில் பிணம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை- அணைகுடம் இடையே உள்ள வயல்வெளி பகுதிக்கு அருகில் பாட்டார் ஓடையில் ஒரு பெண் பிணம் புதைந்த நிலையில் இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் வசித்து வந்த காமாட்சி (வயது 85) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகவும், ஓடையில் பிணமாக கிடந்தது காமாட்சிதான் என்றும் அவரது மகள் சுமதி தெரிவித்தார். உடல் முழுதும் மண்ணில் புதைந்த நிலையில் அவர் அணிந்திருந்த புடவை மட்டும் வெளியே தெரிந்ததால், அது காமாட்சியின் பிணம்தானா? என்பதை போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை. மேலும் நேற்று முன்தினம் மாலை இருள் சூழ்ந்து விட்டதால் ஓடையில் இருந்து பிணத்தை வெளியே எடுக்கவில்லை.
உறவினர்கள் உறுதி செய்தனர்
இதைத்தொடர்ந்து நேற்று ஓடையை தோண்டி பிணத்தை வெளியே எடுக்கும் பணி ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் தமிழரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர். பிணம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை டாக்டர் ராஜா தலைமையிலான குழுவினர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். காமாட்சியின் உறவினர்கள் பிணத்தின் மீதிருந்த உடைகள் உள்ளிட்டவற்றை கொண்டு அது காமாட்சிதான் என்பதை மீண்டும் உறுதி செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் விசாரணை நடத்தி, அதனை உறுதி செய்தார்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு மூதாட்டி காமாட்சியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கதிரவன் வந்து விசாரணையில் ஈடுபட்டார்.
கொலையா?
இறந்த காமாட்சிக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உண்டு. இதில் ஒரு மகன் ஏற்கனவே இறந்துவிட்டார். மேலும் காமாட்சி தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக விவசாயம் செய்யப்படாமல் இருந்த தனது சிறிய அளவிலான நிலத்தில் இந்த பருவத்தில் உழவு செய்து விவசாயத்தில் ஈடுபடப்போவதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் அவர் ஓடையில் பிணமாக மீட்கப்பட்டதால், அவர் எப்படி இறந்தார்? எதிர்பாராதவிதமாக ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாரா? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.