சேலம் சுகவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்-நள்ளிரவில் சிறப்பு பூஜை

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-12-19 21:31 GMT
சேலம்:
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
சுகவனேசுவரர் கோவில்
சேலம் டவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை) வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு சுகவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கோவிலில் நடராஜருக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த ஆருத்ரா தரிசனத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
சிறப்பு பூஜை
இதையடுத்து விடிய, விடிய சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரையிலும் நடராஜருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக சாமிக்கு தங்க நாகாபரணமும், அம்மனுக்கு தங்க கவசமும் சாத்துப்படி செய்யப்பட்டு நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சி அளிப்பார்.
அதேசமயம், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ஆருத்ரா தரிசனத்தை யு-டியூப் சேனல் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் நேரலையில் கண்டு வழிபட கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்