சேலம் அருகே பரபரப்பு: பிறந்த ஒரேநாளில் குழந்தை எரித்துக்கொலை-உடலை குப்பையில் வீசிய கொடூரம்

சேலம் அருகே பிறந்த ஒரேநாளில் பச்சிளம் குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-19 21:31 GMT
கொண்டலாம்பட்டி:
சேலம் அருகே பிறந்த ஒரேநாளில் பச்சிளம் குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கொலை
சேலம் அருகே அமானி கொண்டலாம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று மாலை பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் குப்பையில் கிடந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.
பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதால் அங்கு ஏராளமானோர் கூட்டமாக திரண்டனர். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் அந்த குழந்தை இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும், குழந்தையை தீ வைத்து கொலை செய்து வீசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு குழந்தையை பரிசோதனைசெய்தனர்.
போலீசார் விசாரணை
இதனை தொடர்ந்து அந்த குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறந்த ஒரேநாளில் ஆண் குழந்தையை குப்பையில் வீசியதோடு மட்டுமில்லாமல் உடலுக்கு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தையை தீ வைத்து கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கலாம் என்றும், இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாமல் குப்பையில் வீசி கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் ஆண் குழந்தை எரிக்கப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்