மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-பூலாம்பட்டியில் படகு சவாரி செய்து உற்சாகம்
மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குடும்பத்துடன் பூங்காவில் விளையாடி உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
மேட்டூர்:
மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குடும்பத்துடன் பூங்காவில் விளையாடி உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
மேட்டூர்
மேட்டூர் அணையை ஒட்டி அமைந்துள்ள பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். கொரோனா பரவல் இருந்ததால் மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே விடுமுறை தினமான நேற்று காலையில் இருந்து மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. அவர்கள் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் ஒரு சிலர் பொங்கல் வைத்து முனியப்பன் சாமிக்கு கோழி, ஆடு பலியிட்டு வழிபாடு செய்தனர்.
உற்சாகம்
பின்னர் தாங்கள் கொண்டுவந்த உணவை சமைத்து பூங்காவுக்கு சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் குடும்பத்துடன் ராட்டினம், ஊஞ்சல் போன்றவற்றில் விளையாடி உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
இன்னும் சிலர் மேட்டூர் காவிரி ஆற்றிலும், சிலர் மேட்டூர் கால்வாய் பகுதியிலும் நீராடி மகிழ்ந்தனர். இதன் காரணமாக மேட்டூர் முனியப்பன் கோவில், பூங்கா, கால்வாய் பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காட்சி அளித்தது. இதனால் ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பூலாம்பட்டி
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை என்பதால் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டியில் குவிந்தனர். பல்வேறு பகுதியிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக விசைப்படகில் பயணம் செய்து மகிழ்ந்தனர். பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.