திருச்சியில் சாட்டை துரைமுருகன் கைது

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட திருச்சி சாட்டை துரைமுருகன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-19 20:57 GMT
திருச்சி
திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். இவர் யு.டியூப்பில் சாட்டை என்கிற சேனல் நடத்தி வருகிறார். மேலும், நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக உள்ளார். நேற்று மாலை சென்னையில் உள்ள தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி (வயது 34) மற்றும் நாம் தமிழர் கட்சியினர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
போலீசார் விசாரணை
 எனது கணவர் சாட்டை துரைமுருகன் 7 பேர் கொண்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது விசாரணைக்காக அழைத்துச் செல்கிறோம் என்று மட்டும் கூறினர். ஆனால் அவரை எங்கு வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சென்று கேட்டபோது அவர் அங்கு இல்லை என்பதை தெரிவித்தனர். அவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, எனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 இவ்வாறு அதில் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் கூறும்போது சாட்டை துரைமுருகன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டது தொடர்பாக சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் அவரை விசாரணைக்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றனர்.

மேலும் செய்திகள்