கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று மாலை நடராஜருக்கு திருநீறு, சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர், பன்னீ்ர், பஞ்சாமிர்தம் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல, திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் கோவில், உய்ய கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில், தொட்டியம் அனலாடீஸ்வரர் உள்பட திருச்சி மாநகர மற்றும் புறநகரில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
லால்குடி-காட்டுப்புத்தூர்
லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆதிரை விழாவையொட்டி தினமும் இரவில் சுவாமி புறப்பாடும், திருநடன காட்சியும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடராஜருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. முன்னதாக சோமசுந்தரர் புறப்பாடும், பின்னர் நடராஜ பெருமானுக்கு வெள்ளை சாத்தி புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
காட்டுப்புத்தூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜையுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நடைபெற்றது. மாலை 7 மணி அளவில் 5 சுவாமிகள் புறப்பட்டு கோவில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. மதியம் 12 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.