தமிழக அரசு கிராமிய கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம்
தமிழக அரசு கிராமிய கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
தமிழக அரசு கிராமிய கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி
குமரி மாவட்ட கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் கிராமிய கலைவிழா இடைக்கோடு குடுக்கச்சிவிளையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கென தனி நலவாரியம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கருணாநிதி வழங்கினார். மேலும், கிராமிய கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.
பாராட்டு சான்றிதழ்
தமிழக அரசு வரும் ஜனவரி மாதம் பொங்கல் நாளில் தமிழ்நாடு முழுவதும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு முன்பாக கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மங்கள இசை, நையாண்டி மேளம், கரகாட்டம், களரி, தப்பாட்டம் மற்றும் ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்திய கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், தகவல் தொழில்நுட்பவியல் துறையில் பல கலைகள் குறித்த தகவல்கள், விளக்கங்கள் ஏடுகளில் உள்ளது. சுமார் 8 லட்சம் பக்கம் ஓலைசுவடிகள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்
கலைஞர்களுக்கு இசைக்கருவிகள்
தொடர்ந்து, நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் சார்பில் 2 பேருக்கு ரூ.35 ஆயிரத்திற்கான காசோலை, கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், 4 கலைஞர்களுக்கான அடையாள அட்டை போன்றவற்றை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் (திருநெல்வேலி) கோபாலகிருஷ்ணன், கிறைஸ்ட் இண்டர்நேஷனல் பள்ளி தமிழ் ஆசிரியர் (மலமாரி) எஸ்சாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.