வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவில் திருவாதிரை தேரோட்டம்

வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவிலில் திருவாதிரை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2021-12-19 19:59 GMT
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பூமிநாத சுவாமி- மரகதாம்பிகை அம்பாள் கோவிலில் திருவாதிரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

திருவாதிரை திருவிழா
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ள பூமிநாத சுவாமி- மரகதாம்பிகை அம்பாள் கோவில் பழமையான சிவாலயங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவாதிரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.

தேரோட்டம்
விழாவின் சிகர நாளான நேற்று திருவாதிரை தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவ கோஷத்துடன், சிவ வாத்தியங்கள் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரானது நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்த பின்னர் நிலையை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்