பல்கலைக்கழக தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- துணைவேந்தர் வழங்கினார்

பல்கலைக்கழக தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பரிசுகளை வழங்கினார்.

Update: 2021-12-19 19:55 GMT
பேட்டை:
பல்கலைக்கழக தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பரிசு வழங்கினார்.

தடகள போட்டி
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது.
இப்போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை சார்ந்த சுமார் 74 கல்லூரிகளில் இருந்து 1,300 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஓடுதளத்தில் 100மீட்டர், 110மீ, 200மீ, 400மீ, 800மீ, 1,500மீ, 5000மீ, 10,000மீ, 20,000மீ ஆகிய போட்டிகளும், மேலும் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழா
3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் நேற்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார். பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் தலைவரும், பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் முதல்வருமான சுப்பிரமணியன் பேசினார். முன்னதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் ஆறுமுகம் வரவேற்றார்.
தடகள வல்லுநர்களான பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பழனிகுமார், சர்வதேச நடுவர்குழு அமைப்பை சேர்த்த சரபோஜி உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர். முடிவில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் சேது நன்றி கூறினார்.
விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி மற்றும் ஆண்கள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ஜாக்சன் பால்துரை, பெண்கள் போட்டிகளின் ஒருங்கிணைப்பானர் ஆக்னஸ் பிரின்சி, உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை உதவிப் பேராசிரியர் துரை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குனர்கள், பேராசிரியர்கள், நடுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்