சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
தளவாய்புரம்,
தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
சுற்றுலா தலம்
சேத்தூர் அருகே 10 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் தேவதானம் சாஸ்தா கோவில் அருவி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
இந்த அருவி சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் கொரோனா சமயத்தில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வனத்துறை இந்த அருவிக்கு வாரத்தில் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளே செல்ல அனுமதி அளித்தது.
வருகை அதிகரிப்பு
இதையடுத்து ேநற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்தனர்.
இவர்களை வனத்துறை தங்களது வாகனம் மூலம் உள்ளே அழைத்து சென்றனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்ததால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் உள்ளே சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உள்ளே கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் இங்கு உள்ளே செல்ல அனுமதி தந்த தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.