பெட்ரோல் ஊற்றி வியாபாரி தீக்குளிப்பு
தேனி பஸ்நிலைய பூங்காவில் வியாபாரி ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 48). காய்கறி வியாபாரி. அவருடைய மனைவி பிரியா. இந்்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பாண்டி, கோவையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதனால், அவர் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனைவியுடன் சண்டைபோட்டு விட்டு பாண்டி தேனிக்கு வந்து விட்டார்.
நேற்று காலை இவர், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பூங்காவுக்கு சென்றார். அப்போது அவர் தனது கையில் ஒரு பாட்டிலில் பெட்ரோல் கொண்டு சென்றார். பூங்காவில் நின்றபடி திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி பாண்டி தீ வைத்துக் கொண்டார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாண்டியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் கருகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.