பெண்ணை கொன்று காட்டுப்பகுதியில் உடல் வீச்சு

பெண்ணை கொன்று காட்டுப்பகுதியில் உடல் வீச்சு

Update: 2021-12-19 16:33 GMT
பெண்ணை கொலை செய்து தாராபுரம் அருகே அவரது உடலை காட்டுப்பகுதியில் வீசிச்சென்ற கொலையாளிகள் யார் அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பெண் பிணம் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பாலசுப்பிரமணி நகர் உள்ளது. இந்த நகரில் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டுள்ள பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் நேற்று காலை பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். 
உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், துணை போலீஸ்  சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், அன்பு செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. மேலும் கழுத்தின் அருகில் லேசான காயமும் காணப்பட்டது. அந்த பெண்ணின் வலது கையில் பச்சை, வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான கயிறு கட்டப்பட்டிருந்தது. மேலும் அதே கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸ் மோப்பநாய் டெபில் வரவழைக்கப்பட்டது. அது, பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி கவுண்டச்சிபுதூர் சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். 
போலீசார் விசாரணை
அவர்கள் அந்த பெண்ணின் உடல் அருகே கிடந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்  என்று தெரியவில்லை. இது குறித்து தாராபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த பெண்ணை மர்ம ஆசாமிகள் வேறு பகுதியில் வைத்து கொலை செய்து உடலை வாகனத்தில் கடத்தி வந்திருக்கலாம். பாலசுப்பிரமணி நகர் வந்ததும்  வாகனத்தில் இருந்து உடலை தள்ளி விட்டு, பின்னர் கையை பிடித்து தரதர என்று இ்ழுத்து சென்ற தடயம் பதிவாகி உள்ளது. தாராபுரம் பகுதியை நன்கு தெரிந்த ஆசாமிகள்தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்க வேண்டும். 
முதலில் அந்த பெண் யார் என்று அடையாளம் தெரிந்தால்தான் கொலையாளிகளை கண்டறிய முடியும். எனவே அந்த பெண்ணை முதலில் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதியில் பெண்கள் யாராவது காணாமல் போனார்களா அது குறித்து புகார் ஏதும் பதிவாகி உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் வேலைக்கு சென்ற பெண்கள் யாராவது வீடு திரும்பாமல் உள்ளார்களா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அத்துடன் பெண் அணிந்து இருந்த ஆடைகளை கொலை செய்யும் முன்பு கொலையாளிகள் அகற்றினார்களா அல்லது கொலை செய்யப்பட்ட பின்னர் அகற்றினார்களா அந்த பெண்ணை கற்பழித்து கொன்றார்களா என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும். 

மேலும் செய்திகள்