கும்மிடிப்பூண்டி அருகே வாலிபரை கொன்று புதைத்த கொடூரம்
கும்மிடிப்பூண்டி அருகே வெட்டி கொலை செய்து புதைக்கப்பட்ட வாலிபரின் உடலை தாசில்தார் முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்.
போலீசாருக்கு தகவல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ஈச்சங்காடு கிராமம். இங்கு ஆள்நடமாட்டம் இல்லாத மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குப்பை சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை ரத்தகறையுடன் கூடிய தலைமுடி, மனித பற்கள் ஆகியவை கிடந்ததை கண்டு அப்பகுதியில் ஆடு மேய்க்க வந்தவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணி தலைமையில் சென்ற ஆரம்பாக்கம் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, குப்பை கிடங்கின் அருகே சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீர் நிறைந்த கால்வாய் அருகே ஒரு மனித உடல் புதைக்கப்பட்டிருக்கும் அடையாளமும் அருகே ரத்தக்கறை கிடந்ததும் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் முன்னிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இடத்தில் போலீசர் தோண்டி பார்த்தனர். அங்கு 2 அடி ஆழத்தில் கொன்று புதைக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவரின் உடலை போலீசார் மீட்டனர். தலை மற்றும் உடம்பில் வெட்டு காயங்களுடன் காணப்பட்ட சுமார் 26 வயது கொண்ட அந்த வாலிபரின் முகத்தில் தாடையுடன் கூடிய பற்கள் கத்தியால் வெட்டி உடைக்கப்பட்டு இருந்தன. அவரது மார்பில் செல்வி என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது.
படுகொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
சம்பவ இடத்திற்கு அருகே உள்ள தொழிற்சாலைகளின் வெளியே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலை சம்பவம் தொடர்பாக துப்பு எதுவும் கிடைக்குமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நேற்று முன்தினம் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். திட்டமிட்டு நடைபெற்ற இந்த படுகொலையை நிகழ்த்தியவர்கள் யார்? படுகொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? வட மாநிலத்தை சேர்ந்தவரா? கஞ்சா விற்பனையால் கொடூரம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.