‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாழடைந்த வீட்டின் முன்பு குப்பைகள்
சென்னை வில்லிவாக்கம் காந்தி தெருவில் (பாலியம்மன் கோவில் அருகில்) பாழடைந்து கிடக்கும் வீட்டின் முன்பு கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் இருக்கிறது. குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தள்ளுவண்டிகள் நிரந்தரமாக அங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கவனிப்பார்களா?
- பொதுமக்கள், வில்லிவாக்கம்.
ஆபத்தான மின் இணைப்பு பெட்டி
சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள மின் இணைப்பு பெட்டி கதவு பெயர்ந்த நிலையிலும், வயர்கள் நீட்டிக்கொண்டிருக்கும் நிலையிலும் ஆபத்தான முறையில் காட்சியளித்து வருகிறது. எனவே மக்கள் பாதுகாப்பு கருதி இந்த மின் இணைப்பு பெட்டியை உடனடியாக சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்.
நாய்கள் தொல்லையால் அவதி
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்.) அமைந்துள்ள பாலவாக்கம் பூங்கா தெரு பகுதியில் நாய்கள் தொல்லை மிகுதியாகவே இருக்கிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி துரத்துகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியோர் சாலையில் செல்லவே பயப்படுகிறார்கள். நாய்கள் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
- முத்தமிழ், பாலவாக்கம்.
மெட்ரோ நீர் வராதது ஏன்?
சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோடு பகுதியில் 2 வாரமாக குடிநீர் குழாய்களில் ‘மெட்ரோ’ நீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
- வீவான், புளியந்தோப்பு.
சாலையில் படுத்து கிடக்கும் மாடுகள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா சிங்கப் பெருமாள் கோவில் - வடக்குப்பட்டு கூட் ரோடு செல்லும் சாலையில் மாடுகள் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன. காலை, மாலை வேளைகளில் சாலைகளில் படுத்து கிடக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்தும் நேர்ந்திருக்கின்றன. எனவே இதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
- சமூக ஆர்வலர்கள்.
மழை நின்றும் வடியாத நீர்
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் நீலமங்கலம் காலனி மாரியம்மன் கோவில் 2-வது குறுக்குத்தெருவில் பெருமழை ஓய்ந்து பல நாட்கள் ஆகியும் மழைநீர் இன்னமும் தேங்கி கிடக்கிறது. மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்று உருவாகும் அபாயகரமான சூழ்நிலையும் காணப்படுகிறது. தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
- சமூக ஆர்வலர்கள்.
குண்டும் குழியுமான சாலையால் சிரமம்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பெருங்களத்தூர் இந்திரா நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தான் செல்ல வேண்டியுள்ளது. அடிக்கடி விபத்துகள் நடந்து வாகன ஓட்டிகள் காயமடைந்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. எனவே இச்சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- குமார், இந்திராநகர்.
உடைந்திருக்கும் சிறு பாலம் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியின் 2-வது வார்டுக்குட்பட்ட தங்கசாலை தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய் மேலுள்ள சிறு பாலம் பழுதடைந்து மூன்று ஆண்டுகளாக உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாக ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். எனவே தேவையற்ற அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் இந்த உடைந்த பாலம் சரிசெய்யப்படுமா?
-பொன்.ரவி, பொதட்டூர்பேட்டை.
மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை தேவை
திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பத்தில் உள்ள சென்னீர்குப்பம் வடக்கு பகுதி சர்வீஸ் சாலையில் (தனியார் பல் ஆஸ்பத்திரி அருகே) மின்கம்பங்கள் இருந்தாலும், மின் விளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. எனவே இச்சாலையில் மின்விளக்குகள் அமைத்துத்தர தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதன்மூலம் சமூக விரோத செயல்கள் கட்டுப்படுத்தப்படும். விபத்துகளும் தவிர்க்கப்படும்.
- சமூக ஆர்வலர்கள்.
தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சிரமம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கட்சிபட்டு பகுதியிலுள்ள சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி அமைந்துள்ள இடத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், கொசுக்கள் தொல்லையும் இருக்கிறது. இதன் காரணமாக பொருட்கள் வாங்க வருவோர் சிரமம் அடைகிறார்கள். இந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
- சமூக ஆர்வலர்கள்.