ஈரோடு ஒழுங்குமுறை கூடத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.9,219-க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு ஒழுங்குமுறை கூடத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 219-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-12-18 21:14 GMT
ஈரோடு
ஈரோடு ஒழுங்குமுறை கூடத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 219-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மஞ்சள் மார்க்கெட்
தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிக அளவிலான மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் மாநகர் என்று அழைக்கப்படுகிறது. ஈரோட்டில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த 1-ந்தேதி நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் 508 மூட்டைகளில் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். இதில் தனி விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 903-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 459-க்கும் விற்பனையானது. தனி கிழங்கு குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 299-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 699-க்கும் விற்பனையானது.
ரூ.760 விலை உயர்வு
இந்தநிலையில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று முன்தினம் மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு விவசாயிகள் 1,795 மூட்டைகளில் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். இதில் தனி விரலி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 219-க்கும், தனி கிழங்கு குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 750-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 314-க்கும் விற்பனையானது. இந்த மாதத்தில் இதுவரை குவிண்டாலுக்கு ரூ.760 வரை மஞ்சள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் ஈரோடு செம்மாம்பாளையம் வெளி மார்க்கெட்டில் நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் 3 ஆயிரத்து 656 மூட்டைகளில் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் தனி விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 996-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 969-க்கும், தனி கிழங்கு குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 869-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 191-க்கும் விற்பனையானது.
கூட்டுறவு சங்கம்
மேலும் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்துக்கு 1,312 மூட்டைகள் மஞ்சள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் தனி விரலி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 149-க்கும் அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 959-க்கும், தனி கிழங்கு குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 869-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 369-க்கும் விற்பனையானது.
ஈரோடு செம்மாம்பாளையம் வெளி மார்க்கெட், அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் கூட்டுறவு சங்கம் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 633 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது.

மேலும் செய்திகள்