ஹாவேரியில் சொத்துக்காக கடத்தப்பட்ட மூதாட்டி விடுவிப்பு

ஹாவேரியில் சொத்துக்காக கடத்தப்பட்ட மூதாட்டி விடுவிக்கப்பட்டார். அவரை கடத்திய உறவினர்கள் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-12-18 20:13 GMT
ஹாவேரி:

மூதாட்டி

  ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா பாலம்பிடா கிராமத்தைச் சேர்ந்தவர் துண்டன்னன்வர். இவரது மனைவி தேவிகா(வயது 98). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மாணிக்கப்பா குடும்பத்தினர் அந்த தம்பதியை கவனித்து வந்துள்ளனர். இதனால் மாணிக்கப்பாவுக்கு துண்டன்னன்வர் பல ஆண்டுகளுக்கு முன்பே சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

  மேலும் தேவிகா பெயரில் 7 ஏக்கர் நிலமும் உள்ளது. இந்த நிலையில் 7 ஏக்கர் நிலத்துக்கு ஆசைப்பட்ட தேவிகாவின் உறவினர்களான சந்தீப், எரப்பா, அடப்பா, பிரகாஷ் ஆகியோர் கடந்த 14-ந்தேதி வீட்டுக்குள் புகுந்தனர்.

தீவிர விசாரணை

  பின்னர் தேவிகாவை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு கடத்திச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக மாணிக்கப்பா குடும்பத்தினர் ஹனகல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

  அப்போது, மூதாட்டி தேவிகாவை 5 பேர் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது தான், தேவிகாவை 7 ஏக்கர் நிலத்திற்காக உறவினர்களே கடத்தியது தெரியவந்தது.

5 பேருக்கு வலைவீச்சு

  இதையடுத்து மூதாட்டியை கடத்திய 5 பேரையும் போலீசார் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 5 பேரும், மூதாட்டியை மாணிக்கப்பா வீட்டு அருகே விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மூதாட்டி தேவிகாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்