தொடர்ந்து பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதால் 14 வயது சிறுமியை கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டவர் கைது

மண்டியாவில், தொடர்ந்து பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதால் 14 வயது சிறுமியை கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-12-18 20:03 GMT
மண்டியா:

சிறுமி பலாத்காரம்

  கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் மகள் 14 வயது சிறுமி. இவள் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பரமேஷ் (வயது 46). இந்த நிலையில் 14 வயது சிறுமியின் தாய் மற்றும் தந்தை துப்புரவு தொழிலாளர்களாக இருப்பதால் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை தான் வீட்டுக்கு வருவார்கள்.

  இதனால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பக்கத்து வீட்டுக்காரரான பரமேஷ், சிறுமியின் வீட்டுக்கு சென்று அவளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமி இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.

கர்ப்பம்-கொலை

  இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பரமேஷ், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் எல்லாம் அவளை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது கடந்த 6 மாதங்களாக அவர் தனது காம இச்சைக்கு சிறுமியை பயன்படுத்தி வந்துள்ளார்.

  இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தாள். இதுபற்றி அறிந்ததும் பரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் தான் சிக்கி விடுவோம் என்று பயந்த அவர், சிறுமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி பரமேஷ் நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் தனியாக இருப்பது அறிந்து அங்கு சென்றுள்ளார். பின்னர் அவர், கர்ப்பிணி என்றுகூட பாராமல் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

  பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் மாலையில் வீடு திரும்பி அவளது பெற்றோர், சிறுமி தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

பக்கத்து வீட்டுக்காரர் கைது

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.ஆர்.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இதனால் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்த பரமேஷ் தலைமறைவானார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பரமேசை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பமானதால், தான் சிக்கி விடுவோம் என பயந்து அவளை கழுத்தை நெரித்து கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.

  இதையடுத்து பரமேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போராட்டம்

  இதற்கிடையே, இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இந்த நிலையில் எஸ்.டி. அமைப்பினர் நேற்று மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிறுமியை கர்ப்பமாக்கி கொலை செய்த காம கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

  பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  பலாத்காரம் செய்ததால் கர்ப்பமான 14 வயது சிறுமியை கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியைும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்