தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் நுழைவு வாயில் அருகே ஆட்டோ நிறுத்தம், மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. நுழைவுவாயில் அருகே உள்ள குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் குடிநீருடன் சுற்று வட்டார கடைகளின் கழிவு நீர் கலந்துவிடுகிறது. மேலும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாடுதொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து, அந்த பகுதியில் உள்ள கடைகளின் கழிவுநீர் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பாலாஜி நகர்.
சீரமைக்கப்பட்ட வடிகால்
தஞ்சாவூர் மிஷன் சன்னதி தெரு பீட்டர்ஸ் சர்ச் எதிரில் உள்ள சாக்கடையில் பாலத்தின் சுவர் உடைந்து விழுந்து நீர்போக வழி இன்றி ஒரு மாதமாக குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளி வந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உடைந்த கற்களை அகற்றி தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளையும் பாராட்டினர்.
-பொதுமக்கள், மிஷன் சன்னதி தெரு.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலாகுடி கிராமத்தில் ஆழிகண்டான் குளம் வழியாக செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் மழை நீர் தேங்கி விடுவதால் பள்ளங்கள் இருப்பது தெரியவில்லை, இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் சிரமப்படுகிறார்கள். இதனை சீரமைத்து தரக்கோரி பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-பொதுமக்கள், இரண்டாம்புளிக்காடு ஊராட்சி.