புன்னம்சத்திரம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்தவ போதனை புத்தகம் வழங்கிய 5 பேர் மீது வழக்கு

புன்னம்சத்திரம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்தவ போதனை புத்தகம் வழங்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-18 18:08 GMT
கரூர்
நொய்யல்
போதனை புத்தகம்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் நுழைவுவாயில் முன்பு 2 பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் இனோவா காரில் வந்து நின்று கொண்டு அந்த வழியாக பள்ளிக்குள் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கேக் துண்டுகள் மற்றும் கிறிஸ்தவ போதனைகள் அடங்கிய புதிய ஏற்பாடு சங்கீதம் நீதிமொழிகள் என்ற புத்தகத்தையும்  வழங்கி கொண்டிருந்தனர். 
மாணவ-மாணவிகள் அதை பெற்றுக்கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் மத மாற்றம் செய்வதற்காக தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இவற்றை கொடுப்பதாக கூறி காரில் வந்தவர்களிடம் இதுகுறித்து கேட்டனர்.
முற்றுகை 
அப்போது அங்கு வந்திருந்த கிறிஸ்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சினை பெரியதாவதை உணர்ந்த கிறிஸ்தவர்கள் காருக்குள் அமர்ந்து காரை எடுத்தனர். 
அதைப் பார்த்த ஒருவர் திடீரென காரின் முன்பு நின்று காரை தடுத்தார். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தியவர் மீது காரை ஏற்றுவது போல் காரை ஸ்டார்ட் செய்துள்ளனர். 
இதனால் அதிர்ந்து போன பொதுமக்கள் காரைமுற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
பேச்சுவார்த்தை 
இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவலறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச் செல்வன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட 5 பேர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
5 பேர் மீது வழக்குப்பதிவு
பின்னர் போலீசார் அந்த 5 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் பள்ளி முகப்பில் நின்றுகொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் போதனை புத்தகங்களை வழங்கியவர்கள் கரூர் பகுதியைச் சேர்ந்த மங்கலராஜ், ஆனந்தராஜ், மனோகரன், நிர்மலா, பழனியம்மாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. 
 இதுகுறித்து பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்