குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மங்கலம்,
மங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடு வீடாக சேகரிக்கும் குப்பை குடியிருப்பு அருகே உள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண்எரிச்சல் ஏற்பட்டது.
எனவே பாறை குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு மறியல் செய்தனர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி. மூர்த்தி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா்.
குப்பைகள் அகற்றம்
அப்போது குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவாக பொமக்கள் பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் வாகனம் மூலம் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.