சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
திருநெல்வேலியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அரூர்:
திருநெல்வேலியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
3 மாணவர்கள் உயிரிழப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட 23-வது மாநாடு அரூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் மாநிலசெயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளம்பரிதி உள்ளிட்டோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தை அனைத்து பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும். தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். புதிய பயிர் கடன்களை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வு செய்ய வேண்டும்
பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறைசுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இறந்த மாணவர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டிடங்கள், கழிவறைகளின் தரம் குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.