சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட 2 பேர் கைது
சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்ரீவைகுண்டம் மார்த்தாண்டநகர் திடல் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 23) மற்றும் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த முருகபெருமாள் மகன் அய்யப்ப நயினார் (24) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் தங்களது வாட்ஸ்-அப்பில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.