திருவாரூர் பகுதி வயல்களில் எலி தொல்லை அதிகரிப்பு: பாரம்பரிய முறைப்படி எலிகளை பிடிக்கும் பணி தீவிரம்
திருவாரூர் பகுதி வயல்களில் எலி தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து பாரம்பரிய முறைப்படி எலிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:-
திருவாரூர் பகுதி வயல்களில் எலி தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து பாரம்பரிய முறைப்படி எலிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மழையால் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் 93 ஆயிரத்து 122 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 54 ஆயிரத்து 944 எக்டேர் பரப்பளவில் தாளடி சாகுபடியும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 66 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்று உள்ளது. கனமழையினால் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.
இதில் இருந்து மீண்ட நிலையில் பொட்டாஷ் உரம் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் குருத்துப்பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. 100 சதவீதம் மானியத்தில் பூச்சி மருந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
எலி தொல்லை
இந்த சூழ்நிலையில் 70 முதல் 80 நாட்கள் வயதுடைய சம்பா பயிரிடப்பட்ட வயல்களில் எலி தொல்லையால் பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது. எலிகள் பயிர்களின் தண்டுகளை குறிவைத்து கடித்து துண்டாக்கி வருகிறது. பயிர்கள் சேதமடைவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கதிர்களை எலிகள் சேதப்படுத்தி வருவதால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உளளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் எலிகளை ஒழிப்பதற்கு விஷ மருந்துகளை பயன்படுத்தாமல் பாரம்பரிய ‘புகை கலய’ முறையில் விவசாயிகள் எலிகளை உயிருடன் பிடித்து வருகின்றனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாரம்பரிய முறை
துளையிடப்பட்ட மண்பானையில் வைக்கோலை போட்டு புகையை உண்டாக்கி துளையில் வாய்வைத்து ஊதி அதை வயல் வரப்புகளில் உள்ள எலி பொந்துகளில் வைத்து பிடிப்பதே பாரம்பரிய முறையாகும். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது சம்பா, தாளடி பயிர்களில் கதிர் வந்துள்ளது. இந்த நேரத்தில் எலிகள் நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகிறது.இதனால் மிகப்பெரிய மகசூல் இழப்பினை சந்தித்து வருகிறோம். எலிகளை கட்டுப்படுத்த விஷம் வைத்தால் மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே பாரம்பரிய முறைப்படி வரப்புகளில் உள்ள எலி வளைகளில் புகை வைத்து எலிகளை பிடித்து வருகிறோம். எலிகளை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.