பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் கைது

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-18 16:23 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பேய்க்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் புளேந்திரநாதன் (வயது 59). இவர் பேய்க்குளம் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 22.5.2021 அன்று புளேந்திரநாதன் மகன் தங்க அருண் (19) கடையில் இருந்தபோது, அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் வெள்ளுர் வடக்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சிவா என்ற சிவலிங்கம் (27) தங்க அருணை தாக்கி கடையில் இருந்த விவசாய மருந்து பொருட்களை எடுத்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவலிங்கத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் சிவா என்ற சிவலிங்கம் நாசரேத் போலீஸ் நிலைய 5 வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமைறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் பஜாரில் சிவா என்ற சிவலிங்கத்தை மடக்கி பிடித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து சாத்தான்குளம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் செய்துங்கநல்லூர், முறப்பநாடு, சாத்தான்குளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் மொத்தம் 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.

மேலும் செய்திகள்