ஒடிசாவில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு கடத்தல்: 300 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல்-3 பேர் கைது

ஒடிசாவில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு கடத்தி வந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 300 கிலோ கஞ்சா, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-18 15:59 GMT
தேன்கனிக்கோட்டை:
300 கிலோ கஞ்சா கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, கஞ்சா ஆகியவற்றை ஒழிக்க போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையிலான 26 பேர் கொண்ட 5 தனிப்படை போலீசார் கஞ்சா வாங்கி விற்பனை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து வந்தனர்.  நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் தேன்கனிக்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 300 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. மேலும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
இதையடுத்து லாரியையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.30 லட்சம். லாரியின் மதிப்பு ரூ.8 லட்சம். 
கஞ்சாவை கடத்தி வந்ததாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரியை சேர்ந்த ஹரீஷ் (வயது 50), திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா மாநெல்லூரை சேர்ந்த லோகேஷ் (31), ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஸ்ரீடி நகர் ரெவின்யூ காலனியை சேர்ந்த ஆகுல அய்யப்பரெட்டி (68) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பார்வையிட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
தேன்கனிக்கோட்டையில் கஞ்சாவுடன் கைதாகி உள்ள நபர்கள் 6 மாதங்களாக ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்பட பல பகுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளனர். இவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்