பழனி அருகே திடீரென்று இடிந்து விழுந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

பழனி அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-18 15:34 GMT
நெய்க்காரப்பட்டி:
பழனி அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டி இடிந்தது
பழனி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டது. எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிதாக தொட்டி கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த தொட்டி திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பலத்த சத்தம் கேட்டது. இதனால் கண்விழித்த அப்பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அப்போது சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் இடிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேறி பெருக்கெடுத்து ஓடியது.
சாலை மறியல்
இதற்கிடையே நேற்று காலை அப்பகுதி பெண்கள் நெய்க்காரப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் திரண்டனர். அப்போது நீர்த்தேக்க தொட்டி இடிந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பகுதிக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இடிந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் இரவில் நடந்தது. பகல் நேரத்தில் தொட்டி இடிந்து விழுந்திருந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். மேலும் எங்கள் கிராமத்தில் சாலை, சாக்கடை கால்வாய் என எவ்வித வசதிகளும் இல்லை என்றனர்.
பேச்சுவார்த்தை
மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அதிகாரிகள் இடிந்து விழுந்த நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்