தமிழக கேரள எல்லையில் கால்நடை பராமரிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

தமிழக கேரள எல்லையில் கால்நடை பராமரிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

Update: 2021-12-18 15:05 GMT
கிணத்துக்கடவு

பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக தமிழக-கேரள எல்லையில் கால்நடை பராமரிப்பு குழுவினர் தீவிரமாக  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 

பறவை காய்ச்சல்

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவிவருவதால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவ குழு அமைத்து இரவு, பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் போலீஸ் சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருமி நாசினி தெளித்து பின்னரே அனுமதி

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாத்து, கோழி, கோழித் தீவனம், முட்டை போன்ற பறவைகள் சம்பந்தமாக வரும் வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் அவை கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்படுகிறது.மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்து பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இந்த பணியில் கிணத்துக்கடவு கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:- தமிழகத்திலிருந்து கறி கோழி, முட்டை, இறைச்சி உள்ளிட்டவை கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ஆனால் இவை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவர அனுமதியில்லை. கேரளா பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது என்றனர்.

மேலும் செய்திகள்