வீட்டுக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு

வீட்டுக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு

Update: 2021-12-18 13:42 GMT
ஊட்டி

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குன்னூர் அருகே சின்ன உபதலை கிராமத்துக்குள் 2 கரடிகள் புகுந்தன. அங்கு ஒரு வீட்டுக்குள் கரடி புகுந்து தின்பதற்கு உணவு பொருட்கள் உள்ளதா? என்று தேடி பார்த்தது. மற்றொரு கரடி சிறிது தொலைவில் வெளியே நடமாடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம் போட்டபடி வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் இருந்து கரடி வெளியே ஓடி வந்தது. 

உடனடியாக மக்கள் தங்களது வீடுகளுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டனர். அதன்பின்னர் 2 கரடிகளும் அங்கிருந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்புகளுக்குள் அடிக்கடி கரடிகள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் பொதுமக்கள் இரவில் நடமாட அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்