தேனி மாவட்டத்தில் 95 பள்ளிகளில் பழமையான கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை கலெக்டர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் 95 பள்ளிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-18 13:36 GMT
தேனி:
நெல்லையில் உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதில் 3 மாணவர்கள் பலியானார்கள். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பழமையான பள்ளிக்கட்டிடங்கள், சேதம் அடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டிடங்களின் நிலைமை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 942 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள பழமையான கட்டிடங்கள், சேதம் அடைந்த கட்டிடங்கள், இடித்து அகற்ற வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
95 பள்ளிகள்
அந்த வகையில் மாவட்டத்தில் 64 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 31 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 95 பள்ளிகளில் பழமையான மற்றும் சேதம் அடைந்த கட்டிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கட்டிடங்களை இடிக்கவும், அங்கு மாணவர்கள் செல்லாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் அறிவுறுத்தியுள்ளார்.
கலெக்டர் ஆய்வு
இந்நிலையில், ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அங்கு பயன்பாடின்றி பழமையான கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. அந்த கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த சத்துணவை கலெக்டர் சாப்பிட்டு பார்த்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் உணவு பரிமாறினார்.
தேனி மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்களை பராமரிப்பது, பழமையான கட்டிடங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பராமரிப்பு தேவைப்படும் கட்டிடங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பழமையான வகுப்பறை கட்டிடங்கள், பயன்பாடு இன்றி உள்ள பழமையான கழிப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு
பழமையான மற்றும் சேதம் அடைந்த கட்டிடங்கள் அருகில் மாணவ, மாணவிகள் செல்லாமல் தடுக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்