தர்மபுரியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

Update: 2021-12-18 04:28 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாத தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், அவை தலைவர் நாகராஜன், பொருளாளர் நல்லதம்பி, அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-
தேர்தல் நேரத்தில் அளித்த நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பேற்ற பின் இதுவரை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களின் பிரச்சினைகள் எதையுமே தீர்க்கவில்லை என்ற பொய்யான பிரசாரத்தை செய்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருக்கிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1,233 ஏக்கர் அரசு நிலம் உள்பட 1,783 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீர்ப்பாசன திட்டங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடும் பணிகளும் நடந்தன. ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்களாகியும் இந்த திட்டங்களை செயல்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாலக்கோடு தாலுகாவில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை டிப்ளமோ கல்லூரி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்த இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். மாணவர்கள் பெற்ற கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும். பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2500 வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்க கூடாது. பயிர் இழப்பீடு, வெள்ள நிவாரண இழப்பீடு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்