நல்லம்பள்ளி அருகே சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த சென்ற அதிகாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
நல்லம்பள்ளி அருகே சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
சிறைபிடிப்பு
நல்லம்பள்ளி அருகே வெத்தலக்காரன்பள்ளம் கிராமத்தில் சிப்காட்டிற்கு, நிலம் கையகப்படுத்தி அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் நேற்று கார்கள் மூலம் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி அதிகாரிகள் மற்றும் வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நல்லம்பள்ளி தாசில்தார் செந்தில், அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிய நடவடிக்கை
மேலும் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் வாகனங்களை கிராமமக்கள் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.